மட்டக்களப்பு மாவட்ட செயலக முதியோர் தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் நடத்திய மாவட்ட முதியோர் தின நிகழ்வு கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

முதுமையை எதிர்கொள்வதற்காக வாழ்நாள் முழவதும் தயாராகுதல் என்ற தலைப்பில் இந்த முதியோர் தின நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் வடகிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் கலாபூசணம் எதிர்மன்னசிங்கம் கலந்துகொண்டார்.சிறப்பு அதிதியாக முன்னாள் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி பவளகாந்தன் மற்றும் உதவி அரசாங்க அதிபர் ரங்கநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இந்த முதியோர் தின நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த சிரேஸ்ட பிரஜைகளாக தெரிவுசெய்யப்பட்ட 56பேர் கௌரவிக்கப்பட்டனர்.இதில் 26 பெண்களும் உள்ளடங்கப்படுகின்றனர்.

இந்த நிகழ்வில் முதியோர் சம்மேளனம்,கிராமிய முதியோர் சம்மேளன பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

அத்துடன் சர்வதேச முதியோர் தினத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு இதன்போது பரிசுகள் வழங்கப்பட்டன.