முறைசாரா பொருளாதார பெண் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் - பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு

இலங்கையில் முறைசாராத் தொழில்களில் ஈடுபடுபவர்களுக்குப் பொருளாதாரத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன. இவற்றைக் களைந்து முறைசாரா பொருளாதார பெண் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஆலோசகர் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு தெரிவித்தார்.
பராமரிப்பு முறைசாராப் பொருளாதாரங்களில் பெண்களின் பங்களிப்பை அங்கீகரித்தல் என்ற தொனிப்பொருளில், மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினால் நேற்றையதினம் புதன்கிழமை(30) மட்டக்களப்பு அமெரிக்கமிசன் மண்டபத்தில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தற்போது உலகளாவிய ரீதியில் முறைசாராப் பொருளாதாரத தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பிட்ட சில நாடுகளைச் செல்லப் போனால் பிலிப்பைன்ஸ் 50 வீதம் இந்தோனேசியா 75 வீதம் இந்தியா 90 வீதமாக காணப்படுகின்றது இலங்கையைப் பொறுத்தவரையில் முறைசாராத் தொழிலாளர்களின் மொத்தத் தொகை 69 வீதமாக காணப்படுகின்றது அதிலும் பெண்கள் 61 வீதம் காணப்படுகின்றனர்.

இப்பொருளாதாரத்தில் சில பிரச்சனைகளும் இருக்கின்றன சட்டப்பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் காப்புறுதி வசதியின்மை குறிப்பாக பெண்களுக்கு மகப்பேற்று நலன்கள் இல்லாமை ஓய்வூதியவசதியின்மை மற்றும் குறிப்பிட்ட சம்பள நிர்ணயம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் இருக்கின்றன.

30 வருடங்களுக்கு மேலாக இப்பொருளாதாரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது ஏனைய தொழில் புரிபவர்களைப் போலவே இத்தொழிலாளர்களுக்கும் வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இந்தியாவில் இம் முறைசாரா தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புகள் கிடைக்கின்றன அவர்களுக்கான சம்பள நிர்ணய சட்டம் 2007ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரா கேரளா மற்றும் ராஜஸ்தான் போன்ற பகுதிகளிலும் இவை மேற்கொள்ளப்கட்டு வருகின்றன.
இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் முறைசாராலப் பொருளாதாரத்தின் கீழ் பல்வேறு தொழில் முயற்சிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் கணக்கறிக்கையின் படி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 வீதத்திற்கும் மேலாக பெண்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இலங்கையை பொறுத்தவரையில் முறைசாராப் பொருளாதாரத்தில் பல குறைபாடுகள் இருக்கின்றன இவற்றைக் கலைந்து முறைசாரா பொருளாதார பெண் தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இது தொடர்பாக நாம் ஆய்வுகளை மேற்கொண்டோம் இதன் மூலம் கொள்ளை விளக்க குறிப்பு ஒன்றினைத் தயாரித்துள்ளோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை வறுமை மிக்க மாவட்டம் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமே வறுமை சுகாதாரம் மற்றும் ஏனைய சுட்டிகளில் மிகவும் குறைந்த நிலையில் இருக்கின்றது.
2012ம் ஆண்டு அறிக்கையின் படி வறுமையிலும் பால்நிலை சமத்துவத்திலும் பின்தங்கிய 03 மாவட்டங்களிலும் மட்டக்களப்பும் ஒன்றாகும்.

அதுமட்டுமல்லாது சிசுமரண வீதம் மற்றும் பிரசவத்தின் போது தாய் மரண வீதமும் கூடிய இரண்டு மாவட்டங்களில் மட்டக்களப்பும் ஒன்றாகும் அதுமட்டுமல்லாது இளவயது திருமண வீதத்தில் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடத்தில் இருக்கின்றது.

இவற்றுக்கு காரணம் பெண்கள் அலுவலக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் முதல்நிலைப்படுத்தப்படாமையே ஆகும். இதனைக் குறைக்க வேண்டமாயின் முறைசாராப் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிக்கச் செய்வதற்கு ஒத்தழைப்பு வழங்க வேண்டும்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நாம் கோருவது இந்த முறைசாராப் பொருளாதாரத்தில் அரசாங்கம் கூடிய கவனம் எடுக்கவேண்டும் அதிலும் பெண் தொழிலாளர்கள் விடயத்தில் அவர்களுக்கு ஒத்தழைப்பினை வழங்க வேண்டும் பெண்களுக்கு பொருளாதார நலன்கள் வழங்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முகாமையாளர் சரளா இமானுவேல் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் திட்ட இணைப்பாளர்களான ஆர்.அனுராதா, ஏ.இளங்கேஸ்வரி மற்றும் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பெண்கள் வன்முறை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேட்ட வினாக்களுக்கு பதிளலித்த சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் திட்ட இணைப்பாளர் இளங்கேஸ்வரி,

இலங்கையில் யுத்தம் முடிவுற்றதன் பின் பல நிதி நிறுவனங்கள் பெண்கள் மத்தியில் நுண்கடன் மற்றும் ஏனைய கடன் வசதிகளை கொடுப்பதன் மூலம் பெண்கள் அதனை மீள செலுத்த முடியாமல் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக நாம் பல கிராமங்களுக்கு சென்று ஆலோசனைகளை வழங்கியுள்ளோம் அது மட்டுமல்லாது கிராம உத்தியோகஸ்தர்கள் மட்டத்தில் கலந்துரையாடி அவ்வாறான செயற்பாடுகளை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டும் வருகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் வன்முறைகள் இளவயது திருமணங்கள் போன்றன தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் வன்முறைகள் தொடர்பில் மாவட்ட ரீதியில் எம்மிடம் அறிக்கைகள் எதுவும் இல்லை இருப்பினும் இவை தொடர்பாக எமக்கு ஒரு வருடத்திற்கு சுமார் 300க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

இளவயது திருமணங்கள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டம் அதிகரித்து காணப்பட்டாலும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் தொடர்பில் சரியான புள்ளிவிபரங்கள் எதுவும் பெறமுடியவில்லை என்று தெரிவித்தார்.