வடமுனைக்குளம் புனரமைக்கும் பணிகள் துரிதப்படுப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய செய்கையின் அளவினை அதிகரிக்கும் வகையில் நீர்பாய்ச்சல் குளங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை மற்றும் அனர்த்தங்களின்போது சேதமடைந்த நிலையில் நீர்ப்பாய்ச்சல் குளங்கள்; இருந்ததன் காரணமாக குறிப்பிட்டளவு விவசாய நிலங்களிலேயே விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

இந்த நிலையில் சேதமடைந்த குளங்களை புனரமைத்து மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் முயற்சியினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் கிராண் பிரதேச செயகலத்துக்குட்பட்ட வடமுனைக்குளம் புனரமைக்கப்பட்டுவருகின்றது.

நீர்பாசன மற்றும் விவசாயத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகர் மூர்த்தி முரளிதரன் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் சுமார் இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபா செலவில் இந்த குளம் புனரமைக்கப்பட்டுவருகின்றது.

வடமுனைக்குளத்தின் புனரமைப்பு பணிகளை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவினர் சென்று பார்வையிட்டனர்.

இந்த குழுவில் நீர்பாசன மற்றும் விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் ஐவன் சில்வா,மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் மோகன்ராஜ் உட்பட அதிகாரிகள் குழுவினர் சென்று பார்வையிட்டனர்.

இந்த குளம் புனரமைக்கப்படுவதன் மூலம்; செங்கலடி தொடக்கம் வெலிக்கந்தை வரையிலான பகுதிகளில் உள்ள சுமார் 2000 ஏக்கர் நெற் செய்கையில் ஈடுபடுவோர் நன்மையடையமுடியும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இந்த குளம் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் இந்த ஆண்டு முழுமை பெறும் எனவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.