மதுப்பாவனையும், பெற்றோர் வெளிநாடு செல்லலும் மிகப்பெரிய பிரச்சினை - மட்டு.அரச அதிபர்.

பிள்ளைகள் மதுப்பாவனை, மற்றும் தாய்மார் வெளிநாடுகளுக்குச் செல்லுதல் என்பவற்றாலேயே பெரும் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர் இந்தப்பாதிப்புக்களிலிருந்து அவர்களை மீட்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற, மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கடமை முன்னேற்ற ஆராய்வுக் கூட்டத்திலேயே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை ஒரு வரப்பிரசாதமாகும். எமது மாவட்டத்தின் முன்பள்ளிப் பருவத்தில் பிள்ளைகள் எதிர் கொள்ளுகின்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்கான திடசங்கல்ப்பத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலைநாடுகளைப் பொறுத்தவரையில் முன்பள்ளிப் பருவ ஆசிரியர்களே அதிகம் படித்தவர்களாகவும், அதிக சம்பளம் பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள். எமது நாட்டைப் பொறுத்தவரையில் அந்தநிலை கடைப்பிடிக்கப்படுவதில்லை.
முன்பள்ளிப் பருவம் என்பது ஒரு மனிதனின் அனைத்துவிதமான திறமைகளும் வளர்க்கப்படும் பருவமாகும். இந்தப்பருவத்தில் ஏற்படும் முன்னேற்றமானது நாட்டை ஆக்கக் கூடியதாகவும், அழிக்கக்கூடியதாகவும் இருக்கும். அந்த வகையில் இப்பருவம் மிகவும் முக்கியத்துவமானதாகும். அதனை உணர்ந்து அனைத்து உத்தியோகத்தர்களும் கடமையாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மட்டங்களில் அமுல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.
முக்கியமாக அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிளாஸ் ஒப் மில்க் வேலைத்திட்டம், விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், தேசிய கொள்கை, அடப்படைத் தராதரம் போன்றவற்றைப் பேணும் ஈ.சீ,சீ.டி திட்டம் உள்ளிட்டவைகளும் கலந்துரையாடப்பட்டன.