வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வவுணதீவு மற்றும் கொத்தியாபுலை ஆகிய இரு கிராமங்களில் சிறுவர் நிதியத்தின் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தினால் பாலர் பாடசாலை மற்றும் வாசிப்பு நிலையம் என்பன நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் கே.கஜனின் ஒழுங்கமைப்பில் வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் எல்.ஆர்.டிலிமா தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக மண்முனை மேற்கு வவுணதீவுப் பிரதேச செயலாளர் வெ.தவராஜா கலந்துகொண்டு திறந்துவைத்தார்.
சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் கல்வி நடவடிக்கைக்காகவே வவுணதீவில் பாலர் பாடசாலைக் கட்டிடமும் கொத்தியாபுலையில் வாசிப்பு நிலையக் கட்டிடமும் திறந்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வுகளில் சிறுவர் நிதியத்தின் திட்ட அலுவலகர் ஜீ.எல்.சுபாசன்,வாழ்வாதார திட்ட அலுவலகர் ஐ.நஜீம்,மண்முனை மேற்குப் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் எம்.வரதராஜன்,கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் என்.அரசகுமார்,சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ரி.பிரபாகரன்,சிறுவர் நன்னடத்தை நிகழ்ச்சித் திட்ட உத்தியோகஸ்தர் நா.உருத்திரமூர்த்தி,இளைஞர் சேவை அலுவலகர் மா.சசிகுமார் மற்றும் சிறுவர் நிதியத்தின் உத்தியோகஸ்தர்கள்,வவுணதீவு அபிவிருத்தி நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள்,கிராம முக்கியஸ்தர்கள் பெற்றார்கள் இளைஞர்கள் சிறுவர்கள் கலந்துகொண்டனர்.