மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதை அனுமதிப்பத்திரமின்றி கொழும்புக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட நான்கு தளியார் பஸ் வண்டிகளை கைப்பற்றியதுடன் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டு தண்டப்பணம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ருத்திரமூர்த்தி யுவநாதன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.உதயகுமாரவின் நெறிப்படுதத்தலின் கீழ் இவ்வாறு பாதை அனுமதிப்பத்திரமின்றி பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டிகளை பொலிசாரின் உதவியுடன் இதன் அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தி வருகின்றனர்.
இந்த நடவடிக்கையின் கீழ் கடந்த ஒரு வாரத்தில் பாதை அனுமதிப்பத்திரமின்றி கொழும்புக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட நான்கு பஸ் வண்டிகள் ஏறாவூர் பொலிஸ் பிரிவில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டு சாரதிகள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யபட்ட சாரதிகள் மற்றும் மேற்படி பஸ்வண்டிகளையும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது தலா ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு நீதிபதி குறிப்பிட்ட பஸ் வண்டிகளின் சாரதிகளுக்கு உத்தரவிட்டார்.
எதிர் காலத்தில் பாதை அனுமதிப்பத்திரமின்றி இவ்வாறு பயணிகள் சேவையில் ஈடுபட்டால் குறிப்பிட்ட பஸ் வண்டிகள் அரச உடமையாக்கப்படும் எனவும் நீதிபதி இவர்களுக்கு எச்சரித்து இவர்களை விடுதலை செய்யதார் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ருத்திரமூர்த்தி யுவநாதன்மேலும் குறிப்பிட்டார்.
