மட்டக்களப்பு படுவான்கரை பகுதியின் மண்முனை மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கடுக்காமுனை வாணி வித்தியாலய மாணவிகளே இந்த சாதனையினை படைத்துள்ளனர்.
2013ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் கடுக்கமுனை வாணி வித்தியாலயம் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.
கரடுமுரடான வெளியில் காலில் விலையுயர்ந்த பாதணி இல்லாமல் வெறும் பாதங்களுடன் அயராத பயிற்சியினை மேற்கொண்டு இந்த சாதனையினை படைத்துள்ளனர்.
அனுராதபுரம் மாநகரசபை மைதானத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் இந்த சாதனையினை படைத்துள்ளது.
பொல்காவலைக்கும் கடுக்காமுனை வாணி வித்தியாலயத்துக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கடுக்காமுனை இரண்டாம் இடத்தினை தட்டிக்கொண்டது.
தேசிய ரீதியில் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு கடுக்கமுனையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.கடுக்காமுனை பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இந்த வரவேற்பினை செய்தனர்.
மாணவர்கள் மாலைகள் அணிவிக்கப்பட்டு கல்வித்திணைக்கள அதிகாரிகள்,பாடசாலை அதிபர்கள்,பொதுமக்கள்,மாணவர்கள் புடை சூழ ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு நிகழ்வுகள் இடம்பெற்றன.
பாடசாலை அதிபர் சு.தேவராஜன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மண்முனை மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஸ்ரீநேசன், மகேந்திரகுமார், கோட்டக்கல்வி பணிப்பாளர் சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாணவர்களின் வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்ல பெரும்பங்காற்றிய ஜீவரெட்னம் கிராம மக்களினால் இதன்போது கௌரவிக்கப்பட்டார்.
கடந்த2012ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட தேசிய மகளிர் உதைபந்தாட்ட போட்டியில் மூன்றாம் இடம்பெற்று கடுக்காமுனை வாணி வித்தியாலயம் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.