காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களில் சிலர் தமக்கு மூன்று மாதம் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
(புதன்கிழமை) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காத்தான்குடி பஸ் டிப்போவில் கடமை புரியும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஜுன் மாதம் மற்றும், ஜுலை மாதம், ஆகஸ்ட் மாதங்களுக்கான சம்பளம் இதுவரையில் வழங்கப்படவில்லை எனவும் இந்த சம்பளத்தினை தரும் வரைக்கும் எமது வேலை நிறுத்தம் தொடருமெனவும் இந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து காத்தான்குடி டிப்போவில் முறையாக மாதம் மாதம் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுவதில்லையெனவும் இதனால் பெரும் அசெகரியங்களை ஊழியர்கள் எதிர் நோக்குவதாகவும் ஊழிர்கள் தெரிவித்தனர்.
காரியாலயத்தை விட்டு வெளியே நின்று இந்த வேலை நிறுத்தத்தில் இந்த ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக காத்தான்குடி பஸ் டிப்போ முகாமையாளர் ஏ.எம்.அப்தர் றஹீமிடம் கேட்ட போது இந்த டிப்போவுக்கு நான் கடந்த ஜனவரி மாதம் தொடக்கமே முகாமையாளராக நியமிக்கப்பட்டேன். நான் இங்கு நியமிக்கப்படும் போதே இந்த சம்பள பாக்கி நிலுவை இருந்தது. இது தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
இந்த காத்தான்குடி டிப்போவில் ஊழியர்கள் தேவைக்கதிமாக உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தக்குரிய சம்பளம் எதிர்வரும் 10ம் திகதி வழங்குவோம்.
இந்த சம்பள நிலுவை தொடர்பாக நான் எமது இலங்கை போக்குவரத்து சபையின் தலைமை அலுவலகத்திற்கு அறிவித்துள்ளேன் என்றார். அனேக ஊழியர்கள் கடமை புரிவதாகவும் காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் வண்டிகள் பல சேவையில் ஈடுபடுவதாகவம் அவர் மேலும் கூறினார்.
இந்த பஸ் டிப்போவில் கடந்த மூன்று மாத சம்பளமாக சுமார் 30 இலட்சம் ரூபா ஊழியர்களுக்கு நிலுவையாக உள்ளமை குறி;ப்பிடத்தக்கது.