கிழக்கு மாகாண ரூபவாகினி கரப்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு,அம்பாரை அணிகள் சம்பியன்

(சசி ஜதாட்சன்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண ரூபவாகினி கரப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள் அணியில் மட்டக்களப்பு மாவட்டமும் பெண்கள் அணியில் அம்பாரை மாவட்டமும் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளர் கே.தவராசா தலைமையில் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் மட்டக்களப்பு திருகோணமலை,அம்பாரை மாவட்டங்களைச் சேர்ந்த 13 அணிகள் பங்கு கொண்டன.

ஆண்கள் பிரிவில் 7 அணிகள் கலந்து கொண்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் கலந்துகொண்ட கிரான் அணி முதலாம் இடத்தையும் காத்தான்குடி அணி இரணடாமிடத்தையும் பெற்றுள்ளது.

இதே வேளை பெண்கள் பிரிவில் 6 அணிகள் கலந்துகொண்ட நிலையில் அம்பாரை அணிகள் முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளது.
இப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பணப்பரிசு வழங்கப்படவுள்ளது. முதலாமிடத்திற்கு பதினையாயிரமும் இரண்டாமிடத்திற்கு பத்தாயிரமும் வழங்கப்படவுள்ளது.

இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகஸ்தர் ரி.ஈஸ்பரன்,தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூல்,மாகாண கணக்காளர் கே.எஸ்.வாலசூரிய,சிவானந்தா தேசியப் பாடசாலை அதிபர் எஸ்.மனோகிதராஜ்,மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி ஜே.கலாராணி,ஆலிதீன் ஹமீர்,திருமதி நிசாந்தி அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.