கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் தேர் நாளை – சிறப்பு கட்டுரை

ஈழத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக விளங்கும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது.

கிழக்கிலங்கையில் தேரோட்டம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் ஒரே ஒரு இடம் இவ்வாலயம் மட்டுமே ஆகும். உற்சவ காலங்களில் இங்கு செல்லும் அனைத்து மக்களும் தேரோட்டத்திற்கு செல்கின்றோம் என்றே கூறுவதுண்டு.

வரலாற்றுத் தொன்மை மிக்க  இவ்வாலயம் மட்டக்களப்பில் உள்ள தேசத்துக் கோயில்களில் ஒன்றாக விளங்குவதுடன், சாதி முறைக்கு எதிரான சமத்துவத்தைப் பேணும் வீரசைவ மரபினையுடையதாகவும், இதன் காரணமாக இவ்வாலயம் மட்டக்களப்பின் ஒரு தேசிய கோயிலாகவும் மதிக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பில் இருந்து மண்முனைத்துறை ஊடாக சுமார் பதின்மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் செழிப்பும் வனப்பும் மிக்க கொக்கட்டிச்சோலை எனும் சிவபூமியில் சிவபெருமான் சுயம்புலிங்கமாக எழுந்தருளி அருளாட்சி செய்கின்றார். சுயம்பு லிங்கமானதால் தான்தோன்றி லிங்கமென அழைப்பர். 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இவ்வாலயத்தில் தனித்துவமானதும், மக்கள் வாழ்க்கையோடு இணைந்ததுமான வழிபாட்டு முறைகளையும், நடைமுறைகளையும் பின்பற்றி பேணி வருவதை காண முடியும்.

பண்டைய காலத்தில் ராணி உலகநாச்சி, மண்முனையை சிற்றரசு புரிந்த போது திகடன் என்னும் வேடன் தேன் எடுக்கச் சென்று கொக்கட்டி மரமொன்றை வெட்டிய சமயம் மரத்தில் இருந்து இரத்தம் பாய்வதை கண்டு உலகநாச்சியிடம் கூற, இதனை பார்வையிட்டு அங்கு சிவலிங்கம் இருப்பதை கண்டு கொண்ட அவர், கொத்துப்பந்தலிட்டு ஆலயம் அமைத்து வழிபாட்டை ஆரம்பித்தார். இதுவே ஆரம்ப கால ஆலயம் என அறிய முடிகிறது.

பின்னாளில் படிப்படியாக தான்தோன்றீஸ்வரர் ஆலயம் சுண்ணாம்பு, சாந்து, கோளங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட போதும், 1978ஆம் வருடம் வீசிய புயல் காற்றின் தாக்கம் காரணமாக சேதமுற்றதால் மீண்டும் ஆலயம் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டு வானுயர்ந்த கோபுரத்துடன் காட்சி தருகிறது.

இலங்கையில் உள்ள இந்து ஆலயங்கள் யாவும் போத்துக்கீச படைகளால் தகர்க்கப்பட்ட சமயம் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மட்டும் காப்பாற்றப்படுவதற்கு இங்குள்ள கல்லினாலான நந்தி உயிர்ப்புடன் எழுந்து புல்லுண்டு போத்துக்கீச படையினரை ஓட வைத்த பெருமை மிகு ஆலயமாக திகழ்கின்றது.

இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவம் ஆவணி மாதத்தில் வருகின்ற வளர் பிரதமையும், உத்தர நட்சத்திரமும் கூடிய திருநாளில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் திருவிழாக்கள் வழமையான உபயகாரர்களினால் நடத்தப்பட்டு இறுதி ஞாயிறு தேரோட்டமும், அன்றிரவு திருவேட்டையும், மறுநாள் காலை தீர்த்தோற்சவமும் இடம்பெற்று வருடாந்த உற்சவம் நிறைவடையும்.

ஒவ்வொரு வருடமும் உற்சவ முடிவில் நிகழ்த்தப்படும் திருக்குடுக்கை என அழைக்கப்படும் வரிசை முட்டி, மட்டக்களப்பில் வாழ்ந்தவர்களும், வாழ்ந்து கொண்டிருப்பவர்களுமான 140 அளவிலான இனப் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு எல்லா இன மக்களும் கௌரவிக்கப்பட்டு வந்த நடைமுறை, போராட்ட சூழலின் போது நிறுத்தப்பட்டமையானது கவலை தரும் விடயமாக மக்களின் இதயங்களில் நிலைத்து நிற்பதை காண முடிகிறது.

இவ்வாலயத்திற்கென சோழ நாட்டில் இருந்து மூன்று தேர்களை தர்மசிங்க மன்னன் வரவழைத்து தேரோட்டத்திற்கு பயன்படுத்தி வந்த போது, அவற்றில் ஒரு தேர் தெய்வக் குற்றம் காரணமாக தேரோட்ட தினமன்று தேரோடும் போது பாதையை விட்டு விலகி மட்டு. வாவியில் வீழ்ந்துவிட்ட போதிலும், இன்றும் அந்த இடம் தேர் தாண்ட பள்ளம்’ என பிரதேச மக்களால் நினைவுபடுத்தி அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளைவரலாற்றுச் சிறப்பு மிக்க கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய தேருக்கான வடம் கன்னன்குடாவில் இருந்து இன்று கோலாகலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கொக்கட்டிச்சோலை திருத்தான்தோறீஸ்வரர் ஆலய மஹோற்சவம் கடந்த 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து எதிர்வரும் 22 ஆம் திகதி தேரோட்டம் இடம்பெறவுள்ள நிலையிலேயே இவ் வடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இவ் ஆலயத் தேருக்கான வடம் திரிப்பது முதல் தேருக்கான அச்சு போடுதல்,தேர்ச் சில் தயாரித்தல் என்பவை மரபு ரீதியாக கன்னன்குடா மக்களினால் கன்னன்குடாக் கிராமத்தில் செய்யப்பட்டு கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. இறுதியாக 1975ஆம் ஆண்டு கன்னன்குடாவில் வடம் திரித்துச் சென்ற நிலையில் 1998 ஆம் ஆண்டு தேருக்கான அச்சும் சில்லும் செய்யப்பட்டு வழங்கிய நிலையில் கடந்த வருடம் சித்திரத் தேருக்கான வடம் திரிக்கப்பட்டு நூற்றுக் கணக்காணோர் தோழினால் சுமந்து கொண்டு ஆலயத்தில் வழங்கிய நிலையில் பிள்ளையார் தேருக்கான வடம் நேற்று கொழுத்தும் வெயிலில் மேலாடையே பாதணியோ அணியாத நிலையில் 14 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.