உள்ளுராட்சி வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை கொக்குவில் பிரதேசத்தில் நடைபெற்றது.
மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்த ஆரம்ப நிகழ்வையடுத்து இன்று நடமாடும் சேவையும், மருத்துவமுகாமும் நடைபெறுகின்றன. இதில், மாநகர சபை, பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் திணைக்களமும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும், கால்நடை வைத்தியப்பிரிவும் இணைந்து கொள்கின்றன.
நடமாடும் சேவையில், சோலைவரி செலுத்துதல், காணி ஆவணப் பெயர் மாற்றங்கள், நில அளவை வரைபடம், வரலாற்றுத் தாள் பெறல், வியாபாரப்பதிவுகள். நாய்களுக்கான பதிவுகள், விசர் நாய்க்கடிகளுக்கான தடுப்பூசிஏற்றல், குடிபுகு சான்றிதழ் விண்ணப்பம் போன்ற சேவைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும்.
உள்ளுராட்சி வாரத்தனைக் கொண்டாடும் இந்த வாரத்தில் 15ஆம் திகதி வரையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.