செட்டிபாளையத்தில் தொழிற் பயிற்சி நிலையம்

வேலையற்ற இளைஞர்களின் எதிர்கால நலன்கருதி களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் தொழில் பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதியுதவியுடன் இலங்கை நட்புறவுச்சங்கம் மற்றும் செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் சமூக மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் இந்த தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

செட்டிபாளையம் பிரதான வீதியை ஒட்டியதாக அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்பயிற்சி நிலையம் நேற்று திறந்துவைக்கப்பட்டது.

செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் சமூக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் சீ.நாகலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி சி.அமலநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள மேலதிக கல்விப்பணிப்பாளர் சி.மனோகரன்,கிழக்கு மாகாண முன்பள்ளி பணியகத்தின் தலைவர் பொன்.செல்வநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் முதன் முறையாக வீட்டு மின் இணைப்பு பாடநெறி ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப பயிற்சிக்கு 40 பயிற்சியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் குறித்த பயிற்சி நிலையம் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அவற்றை செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் சமூக மேம்பாட்டு அமைப்பினர் புனரமைத்து இந்த பயிற்சி நெறியை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.