வவுணதீவில் இயங்கும் மதுபான களஞ்சியத்தின் பதிவை இரத்துச் செய்யுமாறு சிவில் பாதுகாப்புக் குழு பிரதிநிதிகள் கோரிக்கை

(சசி ஜதாட்சன்)

மட்டக்களப்பு நகர் உட்பட ஏனைய பகுதிகளில் உள்ள மதுபான சாலைகளுக்கான வினியோகத்தை மேற்கொள்வதற்கான மதுபானக் களஞ்சியம் வவுணதீவில் இயங்கி வருகின்றது இக் களஞ்சியத்தின் பதிவினை இரத்துச் செய்யுமாறு வவுணதீவுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்புக் குழு பிரதிநிதிகள் வேண்டுகோள் வீடுத்துள்ளனர்.
வவுணதீவில் மதுபானசாலை இல்லை மொத்த விற்பனைக்கான களஞ்சியமே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதும் இக் களஞ்சியத்தில் சில்லறையாகவும் விற்கப்பட்டுவந்தது. கடந்த கூட்டத்தில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய சில்லறை விற்பனையினை பொலிஸார் நிறுத்தியுள்ளபோதும் இரவு நேரங்களில்  விற்பனையாளர்களுக்கு இரகசியமாக வழங்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது எனத் தெரிவித்த சிவில் பாதுகாப்புக் குழு பிரதிநிதிகள் ஏனைய பிரதேசங்களுக்கான வினியோகக் களஞ்சியம் எமது பிரதேசத்தில் தேவையில்லாததினால் அக் களஞ்சியத்துக்கு வருடா வருடம் வழங்கும் அனுமதிப் பத்திரப் புதுப்பித்தலை நிறுத்;துவதனுடாக வழங்கியுள்ள அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக் கோரிக்கையினை நேற்று வெள்ளிக்கிழமை மாலை வவுணதீவுப் பரமேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற வவுணதீவுப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களின் மீளாய்வுக் கூட்டத்திலேயே வீடுத்துள்ளனர்.

வவுணதீவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலங்க பெனாண்டோ தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுரத்தவண்டார கக்மன் கலந்துகொண்டதுடன் வவுணதீவுப் பொலிஸ் பிரிவில் உள்ள 16 சிவில் பாதுகாப்புக் குழுக்களினதும் தலா 25 பிரதிநிதிகள் வீதம் கலந்துகொண்டனர்.

இதே வேளை வவுணதீவுப் பிரதேசத்தில் சட்டவிரோத ஆற்ற மண் அகழப்படுவதாகவும் தெரிவித்த இவர்கள் அனுமதிப்பத்திரத்தை துஸ்பிரயோகம் செய்து அனுமதி வழங்கிய இடத்தை விட்டு வேறு இடங்களில் ஆற்று மண் அகழப்படுவதனால் விவசாய வயல்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்ததுடன் இரவு நேரங்களில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோத ஆற்று மண் அகழ்தல் இடம்பெற்ற வருவதாகவும் தெரிவித்ததுடன் அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.