மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் ஒரே நாளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டபோதிலும் இதுவரையில் அதன் சூத்திரதாரிகள் எவரும் கைதுசெய்யப்படாததை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
முட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்காடு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை தொடர்ந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியூடாக கவன ஈர்ப்பு பேரணி சென்றது.
குருக்கள்மடம் செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு பேரணியானது குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் வரை பேரணி சென்றதுடன் அங்கு கவன ஈர்ப்பு உரைகளும் இடம்பெற்றன.
தமிழர்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் பாதுகாப்பு கேட்கும் சமாதான காலம் என்ற வாசகத்துடன் இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், கி..துரைராஜசிங்கம்,பிரசன்னா இந்திரகுமார்,அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கலையரசன்,இராஜேஸ்வரன்,தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சேயோன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் இந்து ஆலயங்களை பாதுகாப்போம், இந்து ஆலயங்களின் சொத்துகளை பாதுகாப்போம்,ஆலயங்கள் சூரையாடப்பட்டதற்கு இதுவரை தீர்வுதான் என்ன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்தனர்.
இந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடம்பெற்ற பகுதியில் பெருமளவான பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.