புனித சிசிலியா பெண்கள் கல்லூரி, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இவ்வைபவத்தில், பாடசாலை பிரதி அதிபர்கள் அருட்செல்வி எம். அஞ்சலிக்கா, எம்.சுந்தரலிங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் தீசன் ஜெயராஜ், ஏசியா பவுண்டேஷன் நூல்கள் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர் அன்டன் நல்லதம்பி, மேற்படி நிறுவன நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் செல்வி சட்ரிணி வீரதுங்க மற்றும் ஆசியாவுக்கான நூல்கள் நிகழ்ச்சியின் அனுசரணை நிறுவனமான சிறிலங்கா டெலிகொம் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் கோபிநாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் தீசன் ஜெயராஜ் தனது முன்னுரையின்போது,
இப்பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நியமங்களை அதிகரிப்பதே, இவ்வருடத்துக்கான சங்கத்தின் முன்னுரிமை இலக்கு எனக்குறிப்பிட்டதுடன், இவ்விலக்கை எட்டுவதற்கான முதற்படியாக கடந்த மாதத்தில் மாணவரின் அறிவின் உயர் அறுவடையாய் வெளிக்கொணரப்பட்டிருந்த மாபெரும் கல்விக்கண்காட்சியையும், அடுத்த நிலையில் இன்றைய நூற்றொகுதி நன்கொடை ஏற்பாட்டையும் சுட்டிக்காட்டினார்.
ஏசியா பவுண்டேஷன் நூற்கள் நிகழ்ச்சித்திட்டப்பணிப்பாளர் அன்டன் நல்லதம்பி தமதுரையில்,
தமது நிறுவனத்துக்கும் பல கல்விசார் நிறுவனங்களுக்கும் நூல்தொகுதி நன்கொடைத் திட்டங்கள் நீண்டகாலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும், தற்போது சற்று வீரியமடைந்தநிலையில், கற்றல் கற்பித்தலை ஊக்குவிக்கக்கூடிய வகையில் தெரிந்தெடுக்கப்பட்ட பல ஆங்கில நூற்களின் நன்கொடைத் திட்டங்களை தாம் முன்னெடுத்துவருவதாகக் குறிப்பிட்டதுடன் தொடர்ந்தும் இப்பாடசாலைக்கு தமது ஆதரவு கிடைக்கப்பெறுமெனவும் உறுதியளித்தார்.
இவ்வைபவத்தில் ஏசியா பவுண்டேஷன் நூற்கள் நிகழ்ச்சித்திட்டப் பிராந்திய முகாமை யாளர் செல்வி சட்ருணி வீரதுங்க, பிரதி அதிபர் அருட்செல்வி அஞ்சலிக்கா, இலங்கை டெலிகொம் மட்டக்களப்பு நிறுவனப் பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் கோபிநாத் ஆகியோரும் உரையாற்றினர்.
ஏசியா பவுண்டேஷன் சார்பில் பாடசாலை மாணவர்களுக்கென கல்வி மேம்பாட்டுக்கான மேலதிக வாசிப்பு நூற்களின் ஒரு தொகுதியை சட்ரிணி வீரதுங்கவிடமிருந்து அருட்செல்வி அஞ்சலிக்காவும், மற்றுமொரு தொகுதியை பொறியியலாளர் கோபிநாத்திடமிருந்து சுந்தரலிங்கம் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.








