பெரியகல்லாறு வைத்திய அதிகாரி விவகாரம்-இரு வாரத்தில் உண்மை வெளிப்படுத்தப்படும்

பெரியகல்லாறு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தொடர்பில் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் இருவாரங்களில் விசாரணை பூர்த்திசெய்யப்பட்டு உண்மை நிலை தெளிவுபடுத்தப்படும் எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அமலநாதன் தெரிவித்தார்.

பெரியகல்லாறு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கிராம மக்கள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்றதையடுத்து வைத்திய அதிகாரியின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர் அமலநாதன் தலைமையிலான குழுவொன்றினை அமைத்துள்ளார்.

இந்த குழுவினர் அண்மையில் பெரியகல்லாறு ஆதார வைத்தியசாலைக் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

பெரியகல்லாறு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தொடர்பில் பெரியகல்லாறில் உள்ள பொது அமைப்புகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளன.

இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலருக்கு கடிதங்களை அனுப்பியிருந்தனர்.

குறித்த வைத்திய அதிகாரியின் செயற்பாடுகள் தங்களுக்கு திருப்தியில்லாததுடன் வைத்தியசாலையில் ஊழிகளும் இடம்பெற்றுவருவதன் காரணத்தினால் வேறு ஒரு அதிகாரியை நியமித்து தருமாறு கோரியிருந்தனர்.

இதனடிப்படையிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அமலநாதன்,

முதல் கட்ட விசாரணைகள் முடிவுற்றுள்ளதாகவும் இது தொடர்பில் இரு வாரங்களில் உண்மைத்தன்மைகள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

விசாரணைகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சு தகுந்த நடவடிக்கையெடுக்கும் எனவும் செயலாளர் அமலநாதன் தெரிவித்தார்.