விபத்தில் படுகாயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

மன்னம்பிட்டியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்ட பஸ்வண்டியின் நடாத்துனரான கோட்டக்கல்லாறைச் சேர்ந்த சிவராசா சீவலக்சன் (23) என்பவர் கண்டி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் ஏற்கெனவே சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்,அந்த பஸ் வண்டியின் சாரதியுமாக நான்கு பேர் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தனர்.

கொழும்பில் செயலமர்வொன்றை முடித்துக் கொண்டு மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது இவர்கள் பயணித்த தனியார் மினி பஸ் மன்னம்பிட்டியில் வைத்து மரமொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இதில், நான்கு  பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் படு காயமடைந்துள்ளனர். ஐந்தாவது நபர் கண்டி வைத்தியசாலையில் மரணமடைந்தார்.

காயமடைந்தவர்கள் பொலன்நறுவை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மரண விசாரணையின் பின்னர் நேற்று மாலை அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் பி.குணரட்ணம் தெரிவித்தார்.