13வது சரத்தை நீக்குவதை அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரும் மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் போசகருமான கலாநிதி ஜோசப்பொன்னைய்யா தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பு சிவில் சமூகம் நடாத்திய ஊடகவியாளர் சந்திப்பிலேயே ஆயர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் கூட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் தீர்மானங்களை ஊடகவியாளர்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் தலைவர் எஸ்.மாமங்கராஜாவின் தலைமையில் நடைபெற்றது.
இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப்பொன்னையா 13யை நீக்குவதற்கோ அல்லது அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கோ நாம் ஒரு போதும் விரும்பவில்லை 13வது சரத்து தொடர்ந்திருக்க வேண்டும். இதை எமது ஆயர் பேரவையும் அன்மையில் தெரிவித்திருந்து என ஆயர் ஜோசப்பொன்னையா மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் தலைவர் எஸ்.மாமங்கராஜா,
13ல் மாற்றத்தை ஏற்படுத்துவது அதில் மாற்றத்தை கொண்டுவருவதை எமது மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் கண்டிக்கின்றது.
13யை அதன் ஆரம்பத்தில் எல்லோரும் எதிர்த்தாலும் தற்போது சிறுபான்மை மக்களுக்குள்ள ஒரே ஒரு கவசம் இந்த 13தான் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இதனால் சிறுபான்மை மக்களுக்குள்ள இந்த ஒரே ஒரு அதிகாரத்தையும் மாற்றுவதற்கு அல்லது அதில் திருத்தம் கொண்டுவருவதற்கு நாம் இடமளிக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம் தெரிவிக்க விரும்புகின்றது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படப்போவதாக சில தகவல்கள் எமக்கு கிடைக்கின்றன. இது தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.
அவ்வாறு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவதை ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது.
இதை மட்டக்களப்பு சிவில் சமூகம் வன்மையாக எதிர்க்கின்றது. மட்டக்களப்பு சிவில் சமூகத்தினால் ஜனாதிபதிக்கும், உயர் கல்வி அமைச்சருக்கும், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கம் எழுத்து மூலம் இணைக்கப்படக்கூடாது என்பதை தெரியப்படுத்தவுள்ளோம்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்துடன் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தை இணைப்பதற்கு மட்டக்களப்பு சிவில் சமூகம் கண்டனங்களை தெரிவிக்கின்றது.
கிழக்குப் பலக்லைக்கழக அபிவிருத்தியில் மட்டக்களப்பு சிவில் சமூகம் அக்கறையுடன் இருக்கின்றது. கிழக்கு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தியை மட்டக்களப்பு சிpவல் சமூகம் முன்னெடுப்பது எனவும் நாம் தீர்மானித்து இருக்கின்றோம். சிவில் சமூகத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிழக்கு பலக்லைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் அதன் முன்னேற்றத்திற்கும் எப்போதும் உண்டு.
வெளிநாட்டுத்தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டக்களப்புக்கு வருகை தரும்போது மட்டக்களப்பில் அனைவராலும் மதிக்கப்படுகின்ற ஆயர் அவர்களை சந்திக்க வேண்டும். ஆனால் அன்மையில் மட்டக்களப்புக்கு வருகை தந்த வெளிநாட்டுத்தூதுவர் மற்றும் வெளிநாட்டு இராஜ தந்திரிகள் ஆயரையோ அல்லது மட்டக்களப்பு சிவில் சமூகத்தையோ சந்திக்க வில்லை.
கடந்த 30 வருட கால யுத்தத்தின் போது மட்டக்களப்பில் மக்களுக்கு சமயப்பிரமுகர்கள் ஆற்றிய பணிகள் மகத்தானவை அதனால் இங்கு வரும் அனைத்து வெளிநாட்டு இராஜதந்திரிகள் தூதுவர்கள் ஆயரை சந்திப்பதுதான் ஒரு வழக்கமாக இருந்து வருகின்றது.
எனவேதான் மட்டக்களப்புக்கு வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டக்களப்பு ஆயரையும் சிவில் சமூகத்தினரையும் சந்திக்க வேண்டும் என்பதை எமது சிவில் சமூக அமைப்பு வலியுறுத்துகின்றது.
மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பானது சமூக நலன் சார்ந்த அமைப்பாகும். இது மட்டக்களப்பு குரலாக வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு வருகின்றது.
இதில் அனைத்து மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துகின்றவர்கள் இருக்கின்றார்கள். இன்று நாங்கள் எமது முஸ்லிம் சகோதரர்களின் புனித நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வைக் கூட இங்கு நாங்கள் நடாத்தினோம்.
இவ்வாறு ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் கட்டி வளர்க்கும் பனியில் இந்த மட்டக்களப்பு சிவில் சமூகம் பணியாற்றி வருகின்றது. தேசிய நல்லினக்கதையும் சகோதரத்துவத்தையும் சிவில் சமூக அமைப்பு வலியுறுத்தி நிற்கின்றது.
மட்டக்களப்பில் மதங்களக்கிடையில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை கட்டி வளர்;ப்பதில் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு பணியாற்றி வருகின்றது.
அன்மையில் வாழைச்சேனை சுங்காங்கேணி பிரதேசத்தில் இரண்டு மதக்குழுக்களிடையில் இடம் பெற்ற சமய முறண்பாட்டை எமது ஆயர் மற்றும் மட்டக்களப்பு இராமகிருஸ்ன மிஸன் தலைவர் ஆகியோரின் வழிகாட்டலுடன் உரிய இடத்திற்கு சென்று மட்டக்களப்பு சிவில் சமூகம் சுமுகமான முறையில் தீர்த்து வைத்தது.
இவ்வாறு ஐக்கியத்திற்கான வேலைத்திட்டங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்கள் தலைமை தாங்கும் 26000 குடும்பங்கள் உள்ளன. அதே போன்று மாற்றுத்திறனாளிகள் 6000 பேர் உள்ளனர்..
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை இடைவிலகள் 42 வீதமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் நாம் விஷேடமாக கல்வியை முன்னேற்றுவதற்கு அனைவரும் உழைக்க வேண்டும்.
இந்த மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பில் பல கல்விமான்கள், ஓய்வு பெற்ற அரசாங்க உயரதிகாரிகள் உள்ளனர். இவர்களின் ஒத்துழைப்பும் உதவியும் இதற்கு என்றும் உண்டு என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயரும் மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் போசகருமான கலாநிதி ஜோசப்பொன்னைய்யா மற்றும் அருட் தந்தை சுவாமிநாதன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் இராஜேந்திரா, கலாநிதி எம்.பிறேம்குமார், கே.எம்.கலீல், டாக்டர் சேவியர் எம்.மீராசாகிப் உட்பட அதன் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.