இந்தக் குழுவில், பட்டிப்பளை பிரதேச செயலாளர், கச்சைக்கொடி சுவாமிமலை கிராம சேவகர், கச்சைக்கொடி கிராமத்தினைச் சேர்ந்த தமிழ் அங்கத்தவர்கள் 3 பேர், சிங்களவர்கள் 5 பேர், இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர்.
கெவிளியாமடு கிராமத்தில் அத்து மீறிக் குடியேறியவர்கள் எதிர்வரும் 29ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டும் என பிரதேச செயலாளரால் அறிவித்தல்கள் வீடுகளில் ஒட்டப்பட்டதை அடுத்து மட்டக்களப்பு விகாராதிபதி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
'1990ஆம் ஆண்டுக்கு முன்னர் கெவிளியாமடு கிராமத்தில் குறித்த மக்கள், அவர்களது மூதாதையர்கள், பரம்பரையினர் குடியிருந்தமையினை உறுதிப்படுத்தினால், அவர்கள் இக்கிராமத்தில் குடியிருக்கலாம்.
அவ்வாறில்லாத பட்சத்தில் அத்துமீறிக் குடியேறியவர்களாகக் கருதப்படுவர். அதேநேரம், குடியிருந்தமை நிரூபிக்கப்பட்டால் சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்' என அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
கெவிளியாமடு கிராமத்தில் யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் பெருந்தொகையான குடும்பங்கள் குடியேறி விவசாயத்திலும் ஏனைய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கெவிளியாமடு கிராமத்தில் தங்கியிருப்பவர்கள் தமது வீடுகளிலிருந்து 29ஆம் திகதிக்கு முன்னர் வெளியேறுமாறுகூறி கடந்த மாதம் 25ஆம் திகதி பட்டிப்பளை பரதேச செயலாளரினால், அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவித்தலையடுத்து மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதேநேரம் அரசாங்க அதிபருடனும் சந்தித்துப் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
