
தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தின நிகழ்வு நாளை, ஆகஸ்ட் முதலாம் திகதி மட்டக்களப்பு தமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நடைபெறவுள்ளதாக பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்.
தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவை நவம்பர் மாதம் கொண்டாடவுள்ள நிலையில், அதற்கு முன்னோடி ஆரம்ப நிகழ்வாக அவர் பிறந்த நாளை நினைவு கூரும் முகமாக மட்டக்களப்பு தமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழாச்சபை இந்நிகழ்வை நடத்துகிறது.
நூற்றாண்டு விழாச் சபையின் தலைவரும் போராசிரியருமான சி.மொனகுரு இந்தப் பிறந்தநாள் நிகழ்வை தலைமையேற்று நடத்துகிறார்.
தனிநாயகம் அடிகளாரின் சமூக மற்றும் தமிழ் பணிகள் குறித்த உரையினை கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளரான அருட்தந்தை நவரெட்ணம் (நவாஜி) தனிநாயகம் அடிகளாரின் தமிழ் ஆராய்வும் சமூகத் தொண்டுகளும் என்ற தலைப்பில் வழங்குவார்.
இச் சபையினரால், பாடசாலை மாணவர்கள் மத்தியில் கடந்த 2 மாதமாக தனிநாயகம் அடிகளாரைப் பற்றிய விபரங்கள் கூட்டங்கள் மூலம் விபரிக்கப்பட்டுள்ளன. அதில் சிறப்பாக தனது கருத்துக்களை வெளிப்படுத்திய மாணவி அபிராமி யுவராஜனும் உரையாற்றுவார்.
அத்துடன், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் நடைபெறும், தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தின நிகழ்வில் கவிஆரம், பா ஆரம், முதலான நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரிள் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பிலுள்ள பேராசிரியர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் இணைந்து தமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழாச் சபை உருவாக்கப்பட்டுள்ளது. இச் சபை, இவ்வருடம் அவருடைய நூற்றாண்டைக் கொண்டாடுவதுடன், முத்திரை வெளியிடுதல் பாடசாலைகளில், பொது இடங்களில் கலாசார நிகழ்வுகளை நடத்துதல், நூற்றாண்டு விழா மலர் வெளியிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொள்ளவுள்ளது.