புதூர் திமிலதீவில் கடையினை உடைத்துக் கொள்ளையிட்ட மாணவர்களில் இருவரை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவு.

(மா.சசி)

மட்டக்களப்பு புதூரில் கடந்த 24ஆம் திகதி திங்கள் கிழமை இரவு கடையின் கூரையினைப் பிரித்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைதுசெய்யப்பட்டவர்களை நேற்று நீதிமன்றில் மட்டக்களப்புப் பொலிஸார் ஆஜர்படுத்திய போது இருவரை சிறுவர் பராமரிப்பு நன்னடத்டை மற்றும் பராமரிப்பு திணைக்களம் ஊடாக சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி மற்றைய இருவரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

மட்டக்களப்பு புதூரில் திமிலதீவில் உள்ள தனது கடையின் கூரையினைப் பிரித்து 14500ரூபா பெறுமதியான பொருட்களையும் 6000 ரூபா பணத்தினையும் கொள்ளையிட்டுள்ளதாக  திமிலதீவைச் சேர்ந்த க.சிறிதரன் மட்டக்களப்புப் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பாக மட்டக்களப்புப் பொலிஸ் நிலைய குற்றப் புலன் விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி த.சாந்தகுமார் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசாரணையினைத் தொடர்ந்து புதூர் திமிலைதீவுப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களான கிரிசாந்தன்(13 வயது) பிரதாபன் விதுர்சன் (15 வயது) ராகுலன் நடேஸ் (16 வயது) ராஜ்பாபு(14 வயது) ஆகியோரை மட்டக்களப்புப் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது குறித்த கடையினை உடைத்து கொள்ளையிட்டதனை ஒப்புக் கொண்டுள்ளனர்.

குறித்த நான்குபேரையும் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.அப்துல்லா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது கிரிசாந்தன்(13 வயது) ராஜ்பாபு(14 வயது)ஆகிய இருவரையும் சிறுவர் பராமரிப்பு நன்னடத்டை மற்றும் பராமரிப்பு திணைக்களம் ஊடாக சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சீர்திருத்தத்திற்கான ஒப்படைக்குமாறும் எனைய இரு மாணவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரிரப் பிணையில் செல்லுமாறும் உத்தரவிட்ட நீதிபதி மீண்டும் எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றிற்கு நான்குபேரும் சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தாரவிட்டுள்ளார்.