மட்டக்களப்பில் கொள்ளைகளில் ஈடுபட்ட இருவர் கைது

மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதிகளில் வீடுகளை உடைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் இருவரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.


ஆட்களில்லாத நிலையில் பூட்டப்பட்டுக் கிடக்கும் வீடுகளை உடைத்துக்கொண்டு உட்புகுந்து இவர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சந்தேக நபர்கள் இருவரும் பணம், தங்க ஆபரணங்கள், பெறுமதியான வீட்டு உபயோகப் பொருட்களை கொள்ளையிட்டு  அடகு வைத்துள்ளமை மற்றும்  விற்பனை செய்துள்ளமை தொடர்பிலும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் திராய்மடு பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்று தொடர்பான  முறைப்பாட்டைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.