மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நீர் நிலைகளும் வயல்வெளிகளும் சூழ பல்லாண்டு காலமாக அருளாட்சி புரிந்துவரும் அருள்மிகு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 10 தினங்களும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு மு.கு.சச்சிதானந்த குருக்களின் தலைமையில் இடம்பெற்ற உற்சவத்தில் நேற்று இரவு ஆலயத்தில் மாம்பழத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன் இன்று காலை விநாயகவழிபாடுகளுடன் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து வசந்த மண்டப பூசை இடம்பெற்று சுவாமி தீர்த்தக்கேணிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டு தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
இதன்போது அடியார்கள் அலகிட்டு கற்பூரச்சட்டி ஏந்திவந்ததுடன் ஆண்களின் காவடியாட்டங்களும் இடம்பெற்றன.
தீர்த்த உற்சவத்தினை தொடர்ந்து ஆலயத்தில் திருவூஞ்சல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.