டைனைமட் வெடிபொருளை பயன்படுத்தி பிடித்த மீன்களை கொண்டுவந்த இருவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட காயான்கேணி கடற்பரப்பில் சட்டவிரோதமாக டைனைமட் வெடிபொருளை பயன்படுத்தி பிடித்த மீன்களை விற்பனைக்கு கொண்டுவந்ததாகக் கூறப்படும் இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த இருவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் முச்சக்கரவண்டி ஒன்றில் 190 கிலோகிராம் மீன்களை சந்தைக்கு கொண்டு சென்றபோதே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த வாகரை பொலிஸார், இவர்கள் கொண்டுவந்த மீன்களையும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளதாகவும் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து  காயான்கேணி பொலிஸ் சோதனைச் சாவடியில் இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

கைப்பற்றப்பட்ட  மீன்கள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் சந்தேக நபர்கள் இருவரையும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.