இதில், விழாச் சபையின் தலைவரும் பாடசாலைகளில் இச் செயற்பாட்டில் ஈடுபடும் அணியின் தலைவருமான பேராசிரியர் சி.மௌனகுரு, அருட்தந்தையும் விரிவுரையாளருமான நவரெட்ணம்( நவாஜி) , சபைச் செயலாளர் ஏ.ஈ.ராஜேந்திரா ஆகியோர் நேற்றைய தினம்(27.06.2013) மட்டக்களப்பு நகரிலுள்ள வின்சன்ற் தேசியப்பாடசாலை, ஆனைப்பந்தி ஆர்.கே.எம். வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்திருந்தனர்.
பாடசாலைகளில் உயர்தரம், 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கு தனிநாயகம் அடிகளாரினைப்பற்றி விளக்கமளிக்கும் வகையில் இக்குழுவினர் மாவட்டத்தின் பெருமளவான பாடசாலைகளிலும் இது போன்ற விளக்கமளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளனர்.
உலகளாவிய ரீதியில் தமிழ் ஆய்வுக்கு வித்திட்ட தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு இவ்வருடம் நினைவுகூரப்படுவது அனைவரும் அறிந்த விடயமாகும்.
தனிநாயகம் அடிகளாரின், தமிழ்ப் பணியை நன்றியுடன் நினைவு கூரும் வகையில் மட்டக்களப்பு நூற்றாண்டு விழாச் சபையினால், முத்திரை வெளியீடு, நினைவு மலர் வெளியிடுதல், ஊடகப்பணி, பாடசாலைப்பிரச்சாரம், கலாச்சாரச் செயற்பாட்டு அணி என 5 அணியினர் தெரிவு செய்யப்பட்டு விழாக் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கான வேலைகள் நடைபெற்று வருவதாக பேராசிரியர் சி.மௌனகுரு தெரிவித்தார்.
அருட்தந்தை தவத்திரு தனிநாயகம் அடிகளாரின்தமிழ் பணியை உலகறியச் செய்யும் வகையில், அவருடைய தமிழியல் ஆய்வுச் செயற்பாட்டைப் பறைசாற்றும் வகையிலும், எதிர்கால சமூகத்தின் மத்தியில் தமிழ் ஆய்வு முறைகளை மேம்படுத்தல் உள்ளிட்ட பல நோக்கங்களைக் கொண்டு தமது நூற்றாண்டு விழாச் சபை கலை கலாசார நிகழ்வுகள், நூல் வெளியீடு, கருத்தரங்குகள்எனப் பல நிகழ்வுகளுடன் கொண்டாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.