வாகனேரியில் விவசாயிகள் மீது தாக்குதல் - 22பேர் காயம்;

(துதி)

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழ் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக 22பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாதுறு ஓயா நீர் பாய்ச்சலில் இருந்தே நீர் பாய்ச்சல் மூலம் இப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் தமிழர்களின் விவசாய நிலங்களுக்கு செல்லும் நீர் வாய்க்கால் பகுதியை சிலர் மறித்து அடைத்துள்ளனர்.இந்த நிலையில் தமது பகுதிக்கான நீர் தடுக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் பலரிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்காத நிலையில் குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுவோர் அப்பகுதிக்கு சென்று தமது வாய்க்காலில் உள்ள தடையை அகற்ற முயன்றுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த குழுவினர் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.தாக்குதல் நடத்தியவர்களில் பலர் அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்கள் என பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் தெரிவித்தார்.

இதன்போது 22 விவசாயிகள் காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இவர்களில் 17பேர் சிகிச்சைபெற்று சென்றுள்ள நிலையில் ஐந்து பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த வாழைச்சேனை பொலிஸார் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான விசாரணையை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.