திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பிரதேசத்தில் கப்பல்துறை சந்தியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இருவர் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என கருதப்படுபவர் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் எனவும் மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கடந்த 2ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் மாத்தறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என கருதப்படும் சந்தேக நபர் கடந்த 6ஆம் திகதி இரவு திக்வெல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொலை முயற்சி, கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை அதிகாரகளால் கைது செய்யப்பட்டதையடுத்து, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அதற்கு முன்னதாக, கடந்த 2ஆம் திகதி 32 கிராம் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த இருவர் உப்புவெளி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதையடுத்து, தடுப்புக்காவலில் வைத்து மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அந்த விசாரணைகளின்போது, இவர்கள் இருவரும் கொலைக்கு சதித்திட்டம் தீட்டியமை மற்றும் கொலைக்கு உதவி செய்தமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் மேற்படி துப்பாக்கிச் சூடு தொடர்பில் இதுவரை கைது செய்யப்பட்ட 3 பேரும் 24, 28, 34 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் திக்வெல்ல மற்றும் திருகோணமலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேக நபர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என கருதப்படுபவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் உப்புவெளி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
