முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் 2027 வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றம்


ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் வியாழக்கிழமை (19) நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் 18ஆவது சாதாரண சபைக் கூட்டம், சபையின் தவிசாளர் தலைமையில், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இறை வணக்கத்துடன் ஆரம்பமான இச்சபை அமர்வில், கார்த்திகை மாதத்தை முன்னிட்டு யுத்தத்தால் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த அமர்வின் கூட்டக் குறிப்புகள் சபையில் வாசிக்கப்பட்டு முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டதுடன், தவிசாளரின் விசேட உரையும் இடம்பெற்றது.

இன்றைய அமர்வில், 2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பிரதேச சபைக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு சபையில் பிரசன்னமாகியிருந்த அனைத்து உறுப்பினர்களும் தமது முழுமையான ஆதரவை வழங்கியதைத் தொடர்ந்து, அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மொத்தம் 317,886,400.00 ரூபா (31 கோடியே 78 இலட்சத்து 86 ஆயிரத்து 400 ரூபா) நிதி மதிப்பீட்டில் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இன்றைய கூட்டத்திற்கு வருகை தந்த தவிசாளர், உப தவிசாளர் உள்ளிட்ட 30 உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். இதன் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன:

ஆதரவாக: 21 உறுப்பினர்கள்

எதிராக: 05 உறுப்பினர்கள்

நடுநிலை: 04 உறுப்பினர்கள்

வாக்கெடுப்பின் போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த 04 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 01 உறுப்பினரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். அதேவேளை, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 04 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலை வகித்தனர்.

இதன் பிரகாரம், 16 மேலதிக வாக்குகளால் (மொத்தம் 21 ஆதரவு வாக்குகள்) ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாக தவிசாளர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

நிறைவேற்றப்பட்டுள்ள இப்புதிய வரவு செலவுத் திட்டமானது, எதிர்வரும் 2027ஆம் ஆண்டில் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, சுகாதார மேம்பாடு, திண்மக்கழிவு முகாமைத்துவம், மக்கள் நலச் சேவைகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தி, முறையான அபிவிருத்திப் பணிகளைத் திட்டமிட்டு முன்னெடுப்பதற்கான பிரதான நிதி மற்றும் செயற்பாட்டுத் திட்டமாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.