பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்


ஊழல், இலஞ்சங்கள் விடயங்களுக்காகப் எடுக்கிற கரிசனையை இந்த அரசாங்கம்;, இந்த இரண்டு வருடம் கடந்த நிலையிலும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, அவர்களுக்கு என்ன நடந்தது என்ற ஒரு பொறுப்புக்கூறல் எந்தவொரு விடயமுமே இதுவரைக்கும் எந்தவொரு நகர்வும் நகர்த்தப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி குற்றஞ்சாட்டியுள்ளார்.

எங்களுக்கு பிஎஸ்ரி யும் வேண்டாம், பிரிஏயும் வேண்டாம் என்ற ஒரு ஒரு கோரிக்கையை இன்றைய நாள் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் மக்கள் சார்பாக, இந்த இடத்திலே பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக, அனைத்து பொதுமக்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை விடுக்கின்றோம் எனவும் தெரிவித்தர்.

 பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) மட்டக்களப்பு நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் இடம்பெற்ற இப்போராட்டமானது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 8 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக அடிப்படை அமைப்புகள், காணாமலாக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்ட பேரணிப் பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியவாறு கண்டனக் கோஷங்களை எழுப்பினர். குறிப்பாக ‘பிஎஸ்ரிஏ’ சட்ட மூலம் வேண்டாம்...!" என்ற பிரதான பதாகையுடன் திரண்ட அவர்கள், "நாங்கள் கேட்டது மாற்றம்; ஆனால் கிடைத்தது ஏமாற்றம்!" என்ற வாசகம் அடங்கிய அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.   மேலும், "அடக்குமுறைச் சட்டங்கள் எதுவும் வேண்டாம்!", "சட்டம் பாதுகாக்க வேண்டும்; மாறாக பயமுறுத்தக் கூடாது!" மற்றும் "கேட்பது ஜனநாயகம்; தருவது அடக்குமுறை" போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ள இத்தகைய அடக்குமுறைச் சட்டமூலங்களை அரசு உடனடியாகக் கைவிட்டு, ஜனநாயகத்தையும் மக்களின் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமலநாயகி,

இந்த போரினால் பாதிக்கப்பட்டு, காணாமலாக்கப்பட்டு, இந்த யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களாக இன்றைக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இன்றைய காந்தி பூங்காவிலே இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை செய்கின்றோம்.  கடந்த காலங்களில் எமது உறவுகள் காணாமலாக்கப்பட்டதும், ஒரு இன அழிப்பு செய்யப்பட்டதும் இந்த PTA சட்டத்தின் ஊடாகத்தான் எங்களுடைய இன்றைக்கு இன்று வரையும் எங்களுடைய உறவுகளைத் தேடியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.

இந்தச் சட்டங்களை வைத்துக்கொண்டு கடந்த கால அரசு செய்த குற்றங்கள், கடத்தல்கள், கொலைகள் இப்படியான விடயங்கள் கடந்த கால அரசுகளால் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தினால்தான் இடம் பெற்றது.   இதற்கு இந்த பல 17 வருடங்கள் கழிந்தும், ஏன் 30, 35 வருடங்கள் கழிந்தும் இந்தச் சட்டங்களை வைத்துக்கொண்டு அரசு ஒவ்வொரு குடும்பங்களின் அவல நிலைக்கும் கொண்டு வந்திருந்தது, இந்த அரசாங்கங்கள். 

ஆனால் இப்போது புதுசாக பிஎஸ்ரிஏ என்ற ஒரு சட்டத்தையும் கொண்டு வந்து எங்களுடைய உறவுகளைத் தேடும் உரிமையைக் கூட மழுங்கடிக்கப்படுத்துற நிலைமையாகத்தான் இந்த அரசு இன்னும் மிக மோசமான எங்களுடைய உறவுகளைக் கேட்கக் கூட இயலாத ஒரு பிஎஸ்ரிஏ சட்டத்தைக் கொண்டு வந்து எங்களை அந்த குரல்வளைகளை நெரித்து, எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதைக்கூட கேட்க இயலாத ஒரு சட்டப் நடைமுறையைத்தான் கொண்டு வருகின்றார்கள். 

ஆகவே, நாங்கள் கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடத்தி இருந்தோம், பல இடங்களில் நாங்கள் பதிவு செய்திருந்தோம், எங்களுக்கு பிரிஏ யும் வேண்டாம், பிஎஸ்ரிஏ யும் வேண்டாம் என்று சொல்லி. அதே போன்றுதான் இப்போது வரைக்கும் எங்களுடைய உறவுகளைத் தேடும் உரிமை இந்த நாட்டுக்குள் இல்லை. அதை இன்னும் ஒரு முறை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துரைக்கும் முகமாக இந்த அரசும், இந்த அனுர அரசுகூட இந்த ஒரு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்று சொல்லிக்கொண்டு இந்த மக்களை ஒடுக்கி, தங்களுடைய குரல்வளைகளை நெரித்து, தங்களுடைய உரிமைகளைக் கேட்க விடாது தங்களுடைய நிலங்களை, தங்களுடைய உறவுகளை, தங்களுடைய உரிமைகளை, தங்களுடைய பேச்சுச் சுதந்திரத்தைக் கூட நடத்த முடியாதவாறு இந்த பிஎஸ்ரிஏ சட்டத்தைக் கொண்டு வந்து இந்த மக்களை ஒடுக்குற முறையை தமிழர்களாகிய நாங்கள், பாதிக்கப்பட்ட தரப்பாக இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. 

 ஆகவே, இந்த அரசு உடனடியாக ஊழல், லஞ்சங்கள் அந்தந்த விடயங்களுக்காகப் எடுக்கிற கரிசனையை இந்த அரசாங்கம் வந்தும், இந்த இரண்டு வருடம் கடந்த நிலையிலும் இந்த வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, அவர்களுக்கு என்ன நடந்தது என்ற ஒரு பொறுப்புக்கூறல் எந்தவொரு விடயமுமே இந்த அரசாலே இதுவரைக்கும் எந்தவொரு நகர்வும் நகர்த்தப்படவில்லை. 

ஆகவே, இந்த அரசிலும் நாங்கள் நம்பிக்கை இழந்துதான் சர்வதேச விசாரணை வேண்டும், சர்வதேசத்தின் ஊடாக எங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற ஒரு நோக்கோடு நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். அதைத் தடை செய்வதற்காகத்தான் இந்த அரசு இந்த PSTA சட்டத்தைக் கொண்டு வருகின்றது என்றதோ என்ற ஒரு சந்தேகம் எங்களுக்குள்ளே எழுந்து கொண்டிருக்கின்றது.   எங்களுடைய உறவுகளுடைய நிலையையும் கண்டறிவதற்கான எங்களுக்கான ஒரு சுதந்திரத்தைத் தர வேண்டும். ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களாக நாங்கள் இந்த இடத்திலே கூற விரும்புவது எங்களுக்கு பிஎஸ்ரி யும் வேண்டாம், பிரிஏயும் வேண்டாம் என்ற ஒரு ஒரு கோரிக்கையை இன்றைய நாள் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ் மக்கள் சார்பாக, இந்த இடத்திலே பாதிக்கப்பட்ட ஒரு சமூகமாக, அனைத்து பொதுமக்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை விடுக்கின்றோம்.