கொழும்பு, விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பித்துள்ள பௌத்த பிக்குகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (18) ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (16) பிற்பகல் விஹாரமஹாதேவி பூங்காவுக்கு வந்த பிக்குகள் இந்தச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்தனர். அன்று அங்கு தற்காலிகக் கூடாரம் ஒன்றை அமைக்க முயன்றபோது, பொலிஸாருக்கும் பிக்குகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
இதன்போது ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை என பிக்குகள் தெரிவித்தனர்.
பின்னர் புத்த சாசன அமைச்சுக்கு முன்பாகக் கூடி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். எனினும், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விஹாரமஹாதேவி பூங்காவில் தங்கியிருப்பதாக பிக்குகள் அறிவித்தனர்.
இதனிடையே, நேற்றிரவு (17) விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதன்போது, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் திடீர் சுகயீனத்தால் சுவசெரிய அவசர கால அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர், மேலதிக சிகிச்சைகள் எதுவும் தேவையில்லை எனக் கூறி அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் சுய விருப்பின் பேரில் வெளியேறிச் சென்றதாகக் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி மூன்றாவது நாளாக இன்று பிக்குகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர்.


