தேனிசைத் தென்றல் தேவா காலமானார் – தமிழ் திரையுலகில் பெரும் சோகம்!


தமிழ்த் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான ‘தேனிசைத் தென்றல்’ தேவா தனது 75 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுச் செய்தி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இசைத் துறையினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள சூர்யா மருத்துவமனையில் தேவா சிகிச்சை பெற்று வந்ததாகவும், இன்று சனிக்கிழமை (17) காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் காலை 8.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சென்னையின் மயிலாப்பூரில் பிறந்த தேவா, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது தனித்துவமான இசை பாணியால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார்.

1986 ஆம் ஆண்டு வெளியான ‘மாட்டுக்கார மன்னன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானதாகக் கூறப்படும் தேவா, தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களின் மூலம் தனது இசைப் பயணத்தை விரிவுபடுத்தினார்.

‘தேனிசைத் தென்றல்’ என்ற அடைமொழியால் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அவரது இசைப் பங்களிப்பு, தமிழ் திரையிசை வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது.

1989-ம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமான தேவா 1990-இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழக அரசின் விருது, 1992-இல் தமிழ்நாடு அரசின் கலைமாமனி விருதைப் பெற்றார். 1995-ல் ‘ஆசை’ திரைப்படம் தேவாவுக்கு மற்றொரு மாநில விருதை பெற்றுத்தந்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கியுள்ளார். 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை வழங்கியவர் தேவா என்பது குறிப்பிடத்தக்கது.

இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த தேவா பல கானா பாடல்களை எழுதி அவரே இசையமைத்து பாடியும் உள்ளார்.

தேனிசைத் தென்றல் என அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா மறைவு செய்தி அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.