மட்டக்களப்பு 35ஆம் கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்- வீடுகள், நெல் மூட்டைகள் சேதம்!


மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 35ஆம் கிராமம், கண்ணபுரத்தில் இன்று (04.10.2026) ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் ஊடுருவிய காட்டு யானைகள் கடும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளன.

​குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானைகள், வீடொன்றின் சுற்றுவேலியைத் தகர்த்து சுவரையும் உடைத்துச் சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த நெல் மூட்டைகளையும் தின்று அழித்துள்ளன.

போரதீவுப்பற்று எல்லைக் கிராமங்களில் சமீபகாலமாக வேளாண்மை அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், மாலை மற்றும் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் வெகுவாக அதிகரித்துள்ளது.

பிரதான வீதிகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் யானைகள் உலா வருவதால் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர். இப்பகுதியில் தொடர்ச்சியாக ஊடுருவும் யானைகளால் பயன்தரும் மரங்கள், பயிர்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்து வருகின்றன.

ஏற்கனவே காட்டு யானைகளின் தாக்குதலால் பல மனித உயிர்கள் பலியாகியுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன.

​இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் தங்கராசா கயசீலன் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட வீட்டைப் பார்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும், இது தொடர்பாக வெல்லாவெளி வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தினார்.

​சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு அதிகாரிகள் யானைகளை விரட்டியடித்து மக்களைப் பாதுகாத்தனர். அதனைத் தொடர்ந்து, கிராம உத்தியோகஸ்தரும் வருகை தந்து சேதங்களை நேரடியாகப் பார்வையிட்டார்.

​பொதுமக்களின் அவசரக் கோரிக்கை...

எல்லைக் கிராமங்களில் வாழும் மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க உடனடியாக முறையான மின்சார யானை வேலிகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

வனவிலங்கு திணைக்களமும் அரசாங்கமும் இணைந்து இதற்குச் நிரந்தரத் தீர்வை விரைந்து வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.