தம்பிலுவிலில் மீண்டும் கிரிக்கெட் திருவிழா; Capital Metals Cricket Cup-க்கு அரவிந்த டி சில்வா வருகை!


தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நடைபெறவுள்ள Capital Metals Cricket Cup கிரிக்கெட் தொடர், இலங்கை இராணுவத்தின் 242வது காலாட்படைப் பிரிகேட் மற்றும் தம்பிலுவில் எதிரொலி விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.

இதன்படி, போட்டிகள் ஒக்டோபர் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் தம்பிலுவில் எதிரொலி கிரிக்கெட் மைதானம் மற்றும் தம்பிலுவில் மத்திய கல்லூரி மைதானம் ஆகியவற்றில் நடைபெறவுள்ளன.

தொடரின் மாபெரும் இறுதிப் போட்டி ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான அரவிந்த டி சில்வா அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளமை இந்தத் தொடரின் முக்கிய சிறப்பம்சமாக அமைந்துள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிக்கும் ரூ.3,000 பதிவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடரின் சாம்பியன் அணிக்கு கிண்ணத்துடன் ரூ.400,000 பணப்பரிசும், இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணத்துடன் ரூ.300,000 பணப்பரிசும் வழங்கப்படவுள்ளன. அத்துடன், அரையிறுதியில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் தலா ரூ.100,000 வழங்கப்படவுள்ளது.

மேலும், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன், சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் ஆகியோருக்கு தலா கிண்ணத்துடன் ரூ.50,000 பணப்பரிசும், தொடரின் சிறந்த வீரருக்கு கிண்ணத்துடன் ரூ.75,000 பணப்பரிசும் வழங்கப்படவுள்ளன.

கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவித்தல், சமூக ஒற்றுமையை வலுப்படுத்தல் மற்றும் இளைஞர்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணர்தல் ஆகிய நோக்கங்களுடன் நடைபெறும் இந்தத் தொடர், தம்பிலுவில் பிரதேசத்தில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு சிறப்பான விளையாட்டு அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.