மாவட்ட செயலகத்தில் கிறிசலிஸ் நிறுவனத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல்!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கிறிசலிஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் சமூக மற்றும் அபிவிருத்திச் செயற்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (01) இடம்பெற்றது.

கிறிசலிஸ் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் யூ.எல். சம்சுதீன் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், 2022 முதல் 2026 வரையான காலப்பகுதியில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளுதல், சமூகங்களின் தாங்குதிறனை மேம்படுத்துதல், பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், காலநிலைத் தாங்குதிறன், அனர்த்த அபாய முகாமைத்துவம், காலநிலைக்கு ஏற்ற விவசாய நடைமுறைகளில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல், பெண்கள் தலைமையிலான சிறு தொழில் முயற்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் ஜி. பிரணவன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநிதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.நிர்மலராஜ், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், கிறிசலிஸ் நிறுவன இணைப்பாளர் துஸ்யந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் வாகரை மற்றும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட ஆறு கிராம சேவகர் பிரிவுகளில் இத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் சமூக மேம்பாடு, மனிதநேய உதவிகள், பெண்கள் வலுவூட்டல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தழுவல் நடவடிக்கைகள் உள்ளிட்ட துறைகளில் கிறிசலிஸ் நிறுவனம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.