மட்டக்களப்பில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு பாரிய சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தி வருகிறது - சாணக்கியன் எம்.பி சுட்டிக்காட்டு


மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு, பல்வேறு முறைப்பாடுகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் தீர்மானங்கள் மற்றும் அமைச்சரின் பணிப்புரைகளுக்கும் மத்தியிலும் கட்டுப்படுத்தப்படாமல் பாரிய சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்தின் காலத்திலும் இப் பிரச்சினை தீர்வின்றித் தொடர்வதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருப்பவரே மணல் அகழ்வுக்குப் பொறுப்பான அமைச்சராகவும் இருக்கின்றபோதிலும், சட்டவிரோத மணல் அகழ்வை நிரந்தரமாகக் கட்டுப்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. கூட்டங்கள் நெருங்கும் போது தற்காலிகமாகக் குறையும் மணல் அகழ்வு, கூட்டங்கள் முடிந்ததும் மீண்டும் தீவிரமடைகின்றது.

அனுமதிப்பத்திரக் காலம் முடிந்த பின்னர் நிலங்களை மீளமைக்கும் பொறுப்பை அனுமதிப்பத்திரதாரிகள் நிறைவேற்றாததால், பரந்த நிலப்பரப்புகள் கைவிடப்பட்டு வெள்ளப்பெருக்கு அபாயத்தையும் இயற்கை நீர் வடிகால் அமைப்புகளில் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் உட்பட முந்தைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் தலையீடுகள் மற்றும் பாதுகாப்பு அளிக்கப்பட்டமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்விதப் பொறுப்புக்கூறலும் இடம்பெறவில்லை.

மட்டக்களப்பு மாநகர சபை போன்ற அரச நிறுவனங்கள் அபிவிருத்திப் பணிகளுக்காகச் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் ஒரு வருடமாக நிலுவையிலுள்ள நிலையில், தனியார் நபர்களுக்குச் சில வாரங்களிலேயே அனுமதிகள் வழங்கப்படுவதாகச் சாணக்கியன் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரிய அளவில் மணல் அகழப்பட்ட போதிலும் உள்ளூரில் மணல் விலை குறையவில்லை. "இந்த மணல் எங்கே செல்கின்றது? இதனால் பயனடைபவர்கள் யார்?" எனப் பொதுமக்கள் சார்பில் அவர் வினா எழுப்பியுள்ளார்.

அரசாங்கங்களை மாற்றுவதால் மட்டும் முறைமை மாறிவிடாது எனக் குறிப்பிட்டுள்ள சாணக்கியன் எம்பி , அனுமதிப்பத்திரம் வழங்குதல், கண்காணிப்பு, நில மீளமைப்பு மற்றும் சட்ட அமுலாக்கம் ஆகியவற்றில் தற்காலிக நடவடிக்கைகளுக்குப் பதிலாக முழுமையான கட்டமைப்பு மறுபரிசீலனையும் வெளிப்படைத்தன்மையும் அவசியமென வலியுறுத்தியுள்ளார்.