சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (17) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எஸ். ரியால் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
சிறுவர்கள் சமூகத்தின் பெறுமதிமிக்க வளமாக உள்ள நிலையில், அவர்களைப் பாதுகாத்தல், பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் முறையான கல்வியைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியவை அனைத்தும் பெரியவர்களினதும் பொறுப்பாகும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் தொடர்பில் சமூகத்தினர் தெளிவான அறிவைப் பெற்றிருப்பது முக்கியமானது என்றும், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அரச உத்தியோகத்தர்களான தங்களது பொறுப்பாகும் என்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் தெரிவித்தார்.
தற்போது திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர்கள் தொடர்பான பாலியல் குற்றங்கள், சிறுவர்களை பிச்சையெடுக்கச் செய்வது உள்ளிட்ட பல்வேறு பாரதூரமான பிரச்சினைகள் காணப்படுவதாகவும், சட்டத்தின் முன் கொண்டுவரப்படாத பல சம்பவங்களும் இருப்பதாகவும் திருகோணமலை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், முஸ்லிம், தமிழ் மற்றும் கத்தோலிக்க மத நிறுவனங்களின் பிரதிநிதிகள், முன்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.














