நாட்டின் பல பகுதிகளில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பொறியியல் பிரிவின் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவிக்கையில்,
நாட்டின் சில ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்தும் சிறிய அளவிலான வெள்ள அபாய மட்டத்தில் காணப்பட்டாலும், அவற்றின் நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
அதன்படி, நில்வளா கங்கையின் தல்கஹகொட பகுதியில் நீர்மட்டம் தொடர்ந்தும் சிறிய அளவிலான வெள்ள மட்டத்தில் காணப்படுகின்ற போதிலும், அது படிப்படியாகக் குறைந்து வருகிறது.
அதேவேளை, கிங் கங்கையின் நீர்மட்டம் தற்போது வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாகவும், பதேகம பகுதியில் நீர்மட்டம் தொடர்ந்தும் சிறிய அளவிலான வெள்ள மட்டத்தில் காணப்பட்டாலும், அது படிப்படியாகக் குறைகிறது.
மேலும், மில்லகந்த மற்றும் குடா கங்கையின் நீர்மட்டங்களும் சிறிய அளவிலான வெள்ள மட்டத்தில் காணப்பட்ட போதிலும், அவையும் படிப்படியாக வழமை நிலைக்குத் திரும்பி வருகிறது.
இதேவேளை, இன்றைய தினம் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்புகளில் அதிக மழைவீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்புகள் எதுவும் இல்லாததால், தற்போதைய ஆறுகளின் நீர்மட்டம் வெள்ளப் பெருக்காக மாறாது எனப் நீர்பாசனத் திணைக்களம் எதிர்பார்ப்பதாகவும் எல்.எஸ். சூரியபண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
