வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் சோகம் -டிப்பர் வாகனம் - முச்சக்கர வண்டி மோதி பெண் உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் இன்று (16.09.2026) பிற்பகல் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

​35ஆம் கிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இத்துயரச் சம்பவத்தில் சிக்கியுள்ளனர். களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்றுச் சிகிச்சை பெற்றுவிட்டு, தமது சொந்த முச்சக்கர வண்டியில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கூழாவடி தும்பாலை பாலத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி பயணித்துக் கொண்டிருந்தபோது, பாலையடி வட்டை பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கனரக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் கடுமையாகக் காயமடைந்த பெண், உடனடியாகக் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அத்துடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஏனையவர்களும் காயமடைந்துள்ளதுடன், முச்சக்கர வண்டியும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.

விபத்துடன் தொடர்புடைய இரு வாகனங்களும் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.