மட்டக்களப்பில் எல் நினோ பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு


மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் எல் நினோ பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இன்று (17) பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்..எம். சியாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்கும் இயற்கையான காலநிலை நிகழ்வாகும். இதன் தாக்கத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை முறைகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

இதன்போது, இலங்கையின் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழை முறைகள், எல் நினோவினால் ஏற்படக்கூடிய வறட்சி, அதிக மழைவீழ்ச்சி மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட காலநிலைப் பாதிப்புகள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்களான புத்திக வண்டார மற்றும் ஜீவன் கருணாரத்ன ஆகியோர் விளக்கமளித்தனர்.

மேலும், காலநிலை மாற்றங்களினால் விவசாயம், குடிநீர் வளங்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கருத்துகள் பகிரப்பட்டது.

இக்கருத்தரங்கில் உதவி பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட வளிமண்டலவியலாளர் கசுன் பஸ்குவல், திணைக்களத் தலைவர்கள், உயர் அதிகாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.