சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்; அவசர பாதுகாப்பு வசதிகளை கோரும் மக்கள்


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட உடங்கா 2 சமிட்புர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இரவு காட்டு யானையொன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் வசிக்கும் பகுதிக்குள் இரவு நேரத்தில் யானை நுழைந்த போதிலும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு, யானை குடியிருப்புகளுக்கு அருகில் வருவதைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த வீரமுனை வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம். றிஸ்விகான், உடங்கா 2 கிராம உத்தியோகத்தரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து, பொது மக்களுடன் இணைந்து நிலைமையை அவதானித்ததுடன், யானையை குடியிருப்பு பகுதிகளிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த பிரதேச சபை உறுப்பினரிடம், காட்டு யானைகள் குடியிருப்புகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்காலத்தில் எவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன என்பது தொடர்பிலும் மக்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

குறிப்பாக, யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் அவசர சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து அவற்றை விரட்ட வேண்டிய நிலை ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.