மயிலத்தமடு,மாதவனை பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வினை வழங்கப்போவதில்லையெனவும் நீதிமன்றத்தின் ஊடாக அணுகுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நீதிமன்றத்தினை நாங்கள் நாடுவதை தடுப்பதற்கு பல சதிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தான் சந்தேகிப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தின் மக்கள் சந்திப்பும் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் நேற்று(26) மாலை செங்கலடியில் நடைபெற்றது.
செங்கலடி பிரதேசசபை உறுப்பினர் செல்வகுமார் நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டார்.
இதன்போது ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட செங்கலடி மற்றும் அதனை அண்டிய பகுதி மக்களை சந்திக்கும் வகையிலான ஏற்பாடு செங்கலடி பிரதேசசபை உறுப்பினர் நிலாந்தனின் அலுவலகத்தில் நடைபெற்றது.
மக்கள் சந்திப்பினை தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடாத்தப்பட்டது.
இதன்போது தியாக தீபத்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் செங்கலடி பிரதேச தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்,பிரதேச ஆதரவாளர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
"பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஏறாவூர் பற்றுப் பிரதேசத்தில் மக்கள் சந்திப்பொன்றை நடத்தினோம். அப்பிரதேச மக்களின் தேவைகளையும், பதுளை பிரதான வீதி சார்ந்த பிரச்சினைகளையும் கேட்டறிந்தோம். குறிப்பாக, செங்கலடி சந்தைக் கட்டிடத்தை மாற்று வழியின்றி இடிப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களிலும் இப் பிரச்சினைகளைத் தீவிரமாக முன்வைப்பேன். இனிவரும் காலங்களில் மாதத்திற்கு ஒரு முறையாவது ஏறாவூர் பற்றுப் பகுதியில் இவ்வாறான மக்கள் சந்திப்புகள் தொடரும்".
ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், "நீதிமன்ற உத்தரவுகள் குறித்து நாம் கருத்துத் தெரிவிக்க முடியாது. இருப்பினும், வெறும் 15 நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஐந்து இடங்களில் திட்டமிட்ட ரீதியில் இவ்வாறான கோரத் தாக்குதலை நடத்தியிருக்க முடியாது. இதற்குப் பின்னால் பெரிய சூத்திரதாரிகள் இருக்கின்றனர். தற்போது முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் சுரேஷ் சலே மற்றும் பிள்ளையான் ஆகியோர் சிறையிலும் தடுப்புக் காவலிலும் உள்ளனர். இவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். வெறும் கீழ்மட்டச் சிப்பாய்களைச் சிறையிலடைத்து இந்தக் கதையை முடிக்க முடியாது. இந்த விசாரணை முழுமையாக சர்வதேசத் தலையீட்டுடன் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு".
மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம் குறித்துப் பேசிய அவர், "அரசாங்கத் தரப்பிடம் இருந்து தமிழ் மக்களுக்குச் சாதகமான எந்த முடிவும் கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது. பண்ணையாளர்கள் அங்கே சட்டவிரோதமாக இருப்பதாக அமைச்சர் கூறுகின்றார். ஆனால், மாவட்டக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவாகவே கால்நடைகள் அங்கே கொண்டு செல்லப்பட்டன. இப்பிரச்சினை வெறும் பண்ணையாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல் இது எமது மாவட்ட எல்லை, எமது நிலம் மற்றும் இன விகிதாசார மாற்றத்துடன் தொடர்புடைய ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தினுடைய பிரச்சினையாகும். எனவே, அரசாங்கத்தின் மீது நம்பிக்கையின்றி இதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்" எனத் தெரிவித்தார்.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

