மட்டக்களப்பில் சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சைத் தவிர்த்து சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் பொறுப்பான டிஜிட்டல் சமூகம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு !!


சமூக வலைத்தளங்களில் வெறுப்புப் பேச்சைத் தவிர்த்து, சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் பொறுப்பான டிஜிட்டல் சமூகத்தை உருவாக்குவது தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு சர்வோதயா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நேற்று (16) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வோதயா நிறுவனத்தின் முகாமையாளர் புவனேந்திரராஜா வேணுஸ்ரீ தலைமையில் பல்நோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இக்கருத்தரங்கு இடம்பெற்றது.

இதன்போது வெறுப்புப் பேச்சைத் தவிர்த்தல், இணையவழிப் பாதுகாப்பு, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலிச் செய்திகளை அடையாளம் காணுதல் மற்றும் தவறான தகவல்களைப் பகிர்வதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

சமூக ஊடக ஆய்வாளர் ரவீந்திரன் விதுர்ஷன் வளவாளராகக் கலந்துகொண்டு பொறுப்பான சமூக வலைத்தளப் பயன்பாடு, தகவல்களின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்தல் மற்றும் டிஜிட்டல் தகவல் பரிமாற்றம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கினார்.

மேலும், சமூக வலைத்தளங்களைப் பொறுப்புடன் பயன்படுத்துதல் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாத்தல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.