வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் சோகம் - பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!


நிலத்தில் வீழ்ந்து கிடந்த, பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இச்சோக சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவரும், 37-ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6-ஆம் ஆண்டில் கல்வி கற்றுவந்தவருமான ரொ.சஞ்சீவ் (வயது 11) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

நேற்று மாலை சிறுவன் தனது வீட்டிற்கு முன்னால் உள்ள நாவல் மரத்தில் இருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவல் பழத்தை எடுத்து உண்டுள்ளார். பழத்தை உண்ட சிறிது நேரத்திலேயே அச்சிறுவன் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக அவரை களுவாஞ்சிகடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவல் பழத்தில் பாம்பின் விஷம் பட்டிருந்தமையினாலேயே அச்சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.