நம்பிக்கையுடன் நடப்போம் -மட்டக்களப்பில் தலசீமியா விழிப்புணர்வு நடைபவனி

சர்வதேச தலசீமியா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் தலசீமியா விழிப்புணர்வு நிகழ்வும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சத்துணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தொற்றா நோய் பிரிவும் கரித்தாஸ் எகட் நிறுவனமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

தலசீமியா நோயின் தாக்கம் அதிலிருந்து குழந்தைகளை எதிர்காலத்தில் பாதுகாக்கும் வகையிலும் இந்த நோய் தொடர்பிலான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மட்டக்களப்பு காந்திபூங்காவிலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் வைத்தியர்கள்,சுகாதார துறை ஊழியர்கள்,தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்,அவர்களின் குடும்பத்தினர்,பொதுமக்கள்,பொது அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஆரம்பமான இந்த ஊர்வலம் திருமலை வீதியூடாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் வரையில் வருகைதந்தது.

ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் தலசீமியா நோய் தொடர்பில் பல்வேறு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலத்தின் சதுர்முகம் மண்டபத்தில் சர்வதேச தலசீமியா தின விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக பிரதிப்பணிப்பாளர் ஏ.பி.மஸ{த்,மட்டக்களப்பு சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் டாக்டர் கே.மோகனகுமார், சுகாதார சேவைகள் திணைக்கள தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.றுதேசன், கரித்தாஸ் எகட் நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை அன்டனி ஜெயராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தலசீமியா நோய் தொடர்பிலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான சத்துணவு பொதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

அத்துடன் தலசீமியா நோய்க்குள்ளான பிள்ளைகளுக்கான விசேட பிரிவினை உருவாக்கிஅ ர்ப்பணிப்புமிக்க சேவையாற்றிவருவோரும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.