மயிலத்தமடு மற்றும் பெரியமாதவனைப் பகுதியிலுள்ள கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவும், பாரம்பரிய விவசாய நிலங்களை மீட்டுத்தரக் கோரியும் அப்பகுதி மக்கள் மற்றும் கால்நடை பண்ணையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில், பண்ணையாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டு தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தனர்.
"எமது காணி, எமது குரல்" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இப்போராட்டத்தில், இலங்கை அரசாங்கம் தங்களது பாரம்பரிய நிலங்களை உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்த பதாகைகளில், மயிலத்தமடு மற்றும் பெரியமாதவனை மேய்ச்சல்தரைகளை ஆக்கிரமிக்க வேண்டாம் என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. "கால்நடைகளுக்கான மேய்ச்சல்தரையை ஆக்கிரமிக்காதே!", "காணிக்கொள்ளையர்களே! மேய்ச்சல்தரையை விட்டு வெளியேறுங்கள்" போன்ற வாசகங்கள் பதாகைகளில் மும்மொழிகளிலும் எழுதப்பட்டிருந்தன.
மேய்ச்சல்தரைகள் ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக கால்நடைகள் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து ஆழமான கவலை தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூடு, வெடிபொருட்கள், மின்சார வேலிகள் மற்றும் வாள்வெட்டு போன்ற வன்முறைச் செயல்களால் பல கால்நடைகள் கொல்லப்பட்டிருப்பது போராட்டக்காரர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. கொல்லப்பட்ட கால்நடைகளின் புகைப்படங்கள் அடங்கிய பதாகையொன்று "மயிலத்தமடு, பெரியமாதவனை கால்நடைகளின் அவலநிலை" என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டின் பல்வேறு திகதிகளில் நடைபெற்ற கால்நடை இறப்பு சம்பவங்கள் இதில் ஆவணப்படுத்தப்பட்டிருந்தன.
இதேபோன்று வலி வடக்கு (யாழ்ப்பாணம்), கேப்பாப்பிலவு (முல்லைத்தீவு), மயிலத்தமடு மற்றும் மாதவனை (மட்டக்களப்பு) ஆகிய பகுதிகளில் நீண்டகாலமாக நிலங்களை இழந்து தவிக்கும் மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.






.jpeg)
.jpeg)

.jpeg)
