திருகோணமலையில் சிறுபோக பருவ அறுவடையைத் தொடர்ந்து, நெல் கொள்வனவு


திருகோணமலை மாவட்டத்தில் 2026 சிறுபோக பருவ அறுவடையைத் தொடர்ந்து, விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, திருகோணமலை, உப்புவெளி லவ் லேன் பகுதியில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் களஞ்சியசாலையில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் பணிகள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது அறுவடை செய்யப்பட்ட நெல்லை நேரடியாக களஞ்சியசாலைக்கு கொண்டு வந்து ஒப்படைத்து வருகின்றதுடன், நெல் மூடைகள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு அமைவாக பரிசோதிக்கப்பட்டு, எடைபோடப்பட்ட பின்னர் பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன், உழவு இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் மூலம் நெல் மூடைகள் களஞ்சியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தல் நடவடிக்கைகள் ஒழுங்காகவும் தடையின்றியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நெல் கொள்வனவு நடவடிக்கைகள் ஊடாக விவசாயிகளுக்கு தங்களது விளைபொருளுக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்துவதுடன், மாவட்டத்தின் நெல் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் நாட்டின் உணவுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.