செங்கலடி சந்தை வீதியில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமாக வீடு முற்றாக தீக்கிரை!


மின்சாரக் கசிவு (மின் ஒழுக்கு) காரணமாகவே இத்தீ விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இன்று காலை வேளையில் குறித்த வீட்டின் மின் ஒழுக்கு  காரணமாகவே தீ மூண்டுள்ளது. குறுகிய நேரத்திற்குள் தீ வீடு முழுவதும் வேகமாகப் பரவியதால், வீட்டினுள் இருந்தவர்களால் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.

தீயின் வீரியம் அதிகமாக இருந்தபோதிலும், வீட்டின் உரிமையாளர்களும் குடியிருப்பாளர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேறியதால் நல்வாய்ப்பாக எவ்வித உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அருகாமையிலிருந்த பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் உடனடியாகச் செயற்பட்டு, தீயைக் கட்டுப்படுத்த பெரும் போராட்டத்தை மேற்கொண்டனர். 

ஆயினும், இத்தீ விபத்தின் காரணமாக வீட்டின் கூரை, மரத்தளபாடங்கள், மின்னணு சாதனங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் உடமைகள் உட்பட அனைத்தும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக மின் ஒழுக்கு காரணமான விபத்துக்கள் அதிகரித்து வருவதால், மின்சாரப் பயன்பாட்டின் போது பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.