இலங்கையைச் சூழவுள்ள பல கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய கடற்பிராந்தியங்களாக காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பிராந்தியம், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கடற்பிராந்தியம் மற்றும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பிராந்தியம் என்பன தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 - 60 கிலோமீற்றர் வரை அவ்வப்போது அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் கடலலைகளின் உயரம் 2.0 - 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.
கடற்பிராந்தியங்களில் நிலவும் இந்தச் சீரற்ற வானிலை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
