மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு மற்றும் சமூக சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கந்தசாமி பிரபு அவர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக இப்பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு பின்வரும் முக்கிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள் குறித்து உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலை: அப்பகுதி மக்களின் சுகாதார நலனை மேம்படுத்தவும் வைத்தியசாலையின் வளங்களைப் பெருக்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது
செட்டிபாளையம் பொது மைதானம்: இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் மைதானத்தை நவீனமயப்படுத்துவது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
செட்டிபாளையம் பாடசாலை: மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்துவது மற்றும் பாடசாலைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் விசேட கவனம் செலுத்தி செட்டிபாளையம் பிரதேசத்தை முன்னோக்கிய பாதையில் கொண்டு செல்வதே தனது இலக்கு என பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தெரிவித்தார்.



