நாட்டில் தற்போது அதிகரித்து வரும் இணையவழி நிதி மோசடி தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வூட்லர் வலியுறுத்தியுள்ளார்.
பத்தரமுல்லை பகுதியில் வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இணையவழி நிதி மோசடிகள் தொடர்பில் பொலிஸாரால் தொடர்ச்சியாகப் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுவருகின்ற போதிலும், பொதுமக்கள் தற்போது இத்தகைய மோசடிகளில் சிக்கி ஏமாறுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, பொதுமக்கள் இது குறித்து மேலதிக அவதானத்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம்.
இந்த மோசடிகாரர்கள் பெரும்பாலும் முதியவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளை இலக்கு வைத்து செயற்படுவதை காண முடிகிறது. பொலிஸார், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்மற்றும் எந்தவொரு அரச அதிகாரியும் உங்களின் தனிப்பட்ட தரவுகள், வங்கி விபரங்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் விபரங்கள் அல்லது ஒடிபி இலக்கங்களை ஒருபோதும் வினவ மாட்டார்கள்.
மோசடிகாரர்கள“ பொலிஸ் அதிகாரிகளைப் போல நாடகமாடி செய்து, புகைப்படங்கள் மற்றும் போலி சுயவிவரங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தி வருகின்றனர். தேசிய அடையாள அட்டை, வங்கி அட்டை அல்லது வங்கி கணக்குகள் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாகக் கூறி அச்சுறுத்தல் விடுப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறான சந்தேகத்துக்கிடமான அழைப்புகள் ஏதும் கிடைக்கப்பெறுமாயின் அதனை புறக்கனிக்கவும்.
தேவையற்ற இணையவழி இணைப்புகளில் உள்நுளைய வேண்டாம். அடையாளம் தெரியாத எவரது கணக்கிற்கும் பணத்தை வைப்பிலிடவோ அல்லது மாற்றவோ தேவையில்லை. இத்தகைய மோசடிகளில் ஈடுபட்ட சிலரைக் பொலிஸாரால் அடையாளம் காண முடிந்துள்ளதுடன், அவர்களுக்கு எதிராக நீதிமன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 0112 300756, 0112 320141 முதல் 145 வரையிலான தொலைபேசி எண்கள் ஊடாகவும், diir.cid@police.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் விபரங்களை அனுப்பி முறைப்பாடு செய்ய முடியும் என்றார்.
